சங்கராச்சாரியாரை கைது செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? திராவிட தலைவரா?

By 
jj90

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பிரத்யேக பேட்டியளித்தார். அதன்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், இந்துத்துவா தலைவரான, அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பாஜக நிரப்புகிறது என்றார்.

அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்ததற்கிடையே, ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது எனவும், ஜெயலலிதா இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவா தலைவர்தான் என நிச்சயமாக சொல்கிறேன் எனவும் பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்தார்.

“பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் அவர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்; ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்.” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சங்கராச்சாரியாரை கைது செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? திராவிட தலைவரா என கேள்வி எழுப்பி கோவையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சங்கராச்சாரியாரையே கைது செய்த ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா? திராவிட தலைவரா? எனக் கேள்வி எழுப்பி கோவையில் அதிமுக கிளை செயலாளர் ஒருவர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.

அதிமுக துவக்க கால கிளைச்செயலாளர் சுசீந்திரன் என்பவர் பெயரில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் அந்த துண்டு பிரசுரங்களில், ராமர் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்த ஜெயலலிதாவை பாஜக தலைவர்கள் அண்ணாமலையும், தமிழிசை சவுந்தரராஜனும் இந்துத்துவா தலைவர் என கூறி வருகிறார்கள். அதே இந்துத்துவா தலைவர்தான் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரையே கைது செய்தது. ஜெயலலிதா திராவிடத் தலைவிதான் என கூறப்பட்டுள்ளது.

Share this story