தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்? : வானிலை நிபுணர் பதில்

By 
veyil8

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே உள்ளது.

இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தை தாக்கிய புயலின்போது 240 கி.மீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. இது தமிழகத்துக்கு வர வேண்டிய மேகங்களை இழுத்துச்சென்றுள்ளது. இதன் காரணமாகவே இயல்பை விட அதிக வெயில் காணப்படுகிறது. இதனால் தான் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

கடலோர பகுதிகளில் வீசும் கடல் காற்றால் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு சென்னையில் பகல் 11 மணிக்கு கடல் காற்று வீசினால் அது நகர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை பகல் நேரத்தில் ஓரளவுக்கு குறைக்கலாம். ஆனால் புறநகர் பகுதிகளை இந்த காற்று சென்றடைய மாலையில் ஆகி விடும்.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரத்தில் மே 26-ந்தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் மேற்கு திசை கடல் காற்று குறையும்.

அப்போது தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயில் ஜூன் மாதம் 4-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
 

Share this story