ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த இரண்டு நபர்கள் யார்.? சிபிஐ விசாரணை தேவை - வெளியான பரபரப்பு தகவல்..

By 
savukku15

யூ டியூபர் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப்பர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள நீதிமன்றத்திற்கு போலீசார் சவுக்கு சங்கரை பெண் காவலர்களின் பாதுகாப்போடு அழைத்து செல்கின்றனர்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யூ டியூபர் சவுக்கு சங்கரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொண்டார்.

அதற்கு ஏன் இந்த அவசரம் என அரசு வழக்கறிஞர் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை  உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் அரசு பதில் அளிப்பதற்கு முன்பாகவே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.  

இந்தநிலையில், நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்த செயல், நீதிமன்ற அவமதிப்பு என்பதால்,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனுக்கு அழுத்தம் கொடுத்த அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற செயலர் , சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில், நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதத்தால் தற்போது பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. 

Share this story