ரயில் பயணிகளை கொன்றது ஏன்? : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

By 
pet3

கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இருப்பது அதிரடி படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ஷாருக் ஷைபியை கைது செய்தனர்.

இதனை கேரள போலீஸ் டி.ஜி.பி.யும் உறுதி செய்தார். மேலும் ரத்தினகிரியில் கைதான ஷாருக் ஷைபியை கேரளா அழைத்து வர போலீசார் அங்கு சென்றிருப்பதாகவும் கூறினார். இதற்கிடையே ரத்தினகிரியில் ஷாருக் ஷைபி கைதானது எப்படி? என்பதையும், அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்தும் மகாராஷ்டிர அதிரடி படை போலீஸ் டி.ஐ.ஜி. மகேஷ் பாட்டீல் கூறியதாவது:-

கேரளாவில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஷாருக் ஷைபி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் சிக்கி கொள்வோம் என்பதால் அங்கிருந்து உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்திற்கு வந்து விட்டார். இங்கு ரத்தினகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள், அவரது காயம் பெரிதாக இருந்ததால் அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற ஷாருக் ஷைபி, அதுவரை சுவிட்ச் ஆப் செய்திருந்த செல்போனை ஆன் செய்தார். உடனே அவர் ரத்தினகிரி மாவட்ட ஆஸ்பத்திரியில் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவரை பிடிக்க அங்கு விரைந்து சென்றோம். அதற்குள் அவர் நாங்கள் வருவதை தெரிந்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

இதற்காக ரத்தினகிரி ரெயில் நிலையத்திற்கு சென்றபோது அவரை பிடித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது ஏன்? என்பது பற்றியும் ஷாருக் ஷைபி போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்விபரம் வருமாறு:-

கேரளாவிற்கு கடந்த வாரம்தான் ஷாருக் ஷைபி வந்துள்ளான். ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்றபோது ரெயில் பெட்டியில் பயணிகளுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அதே பெட்டியில் இருந்த ஷாருக் ஷைபியின் நண்பர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றினால் அவர்கள் பயந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியபடி ஷாருக் ஷைபி பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். அந்த நண்பர் யார்? அவர் ஏன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்ற கூறினார் என்பது பற்றி விசாரிக்க உள்ளோம், கேரளாவில் விசாரிக்கும்போது இதுபற்றிய முழு விபரம் தெரியவரும் என்றனர். இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இருந்து ஷாருக் ஷைபியை போலீசார் இன்று அதிகாலை கேரளா அழைத்து வந்தனர். அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோழிக்கோடு அழைத்து சென்றனர்.

அந்த வாகனம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோழிக்கோடு நகரை நெருங்கியபோது திடீரென பழுதானது. உடனே அந்த பகுதியில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் வாகனத்தை உடனடியாக பழுதுபார்த்து போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this story