வைகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றியது ஏன்? : ரயில்வே துறை விளக்கம்

By 
vaigai

வைகை, பாண்டியன், கோவை, பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 54 ரயில்களின் புறப்படும் நேரம், வருகை நேரம் ஆகியவை இன்று  அக்டோபர் 1  முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் வந்தே பாரத் ரயில் சேவைக்காக மாற்றப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ரயில் சேவையாக உள்ளது. 46 ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸின் பிறந்தநாளை ரயில் பயணிகள், ரயில் ஆர்வலர்கள் ஆகியோர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும்படியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 8 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1:50 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2:50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை இரவு 10:40 மணிக்குச் சென்று சேரும். மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி சென்னை இடையிலான 653 கி.மீ தூரத்தை 7.50 மணி நேரத்தில் சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்ய உணவுக்கு 364 ரூபாய் உட்பட 1665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு சொகுசுப் பெட்டியில் உணவுக்கு 419 ரூபாய் உட்பட 3055 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

விருதுநகரில் இருந்து சாதாரண பெட்டியில் 1505 ரூபாய், சிறப்பு வகுப்புப் பெட்டியில் 2725 ரூபாய், மதுரையில் இருந்து செல்ல சாதாரண பெட்டியில் 1425 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 2535 ரூபாய், திண்டுக்கலில் இருந்து சாதாரண பெட்டியில் 1330 ரூபாய், சிறப்பு வகுப்புப் பெட்டியில் 2350 ரூபாய், திருச்சியில் இருந்து சாதாரண பெட்டியில் 1070 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 1895 ரூபாய், விழுப்புரத்தில் இருந்து சாதாரண பெட்டியில் 755 ரூபாய், சிறப்புப் பெட்டியில் 1280 ரூபாய் என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில், பிற ரயில்களின் வருகைக்காக நின்று செல்லாமல் இருக்க வைகை, கோவை விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்படும் (12636) வைகை விரைவு ரயில் இனி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6:40 மணிக்கே மதுரையிலிருந்து புறப்படும். அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் இனி இரவு 9:15 மணிக்கு பதிலாக 9:30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும்.

மதுரை- கோவை இடையிலான (16722) கோவை விரைவு ரயில் காலை 7:25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக இனி 25 நிமிடங்கள் முன்பாக காலை 7:00 மணிக்கே புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this story