பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைப்பேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு

By 
atheenam

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி, வாழ்த்துக்கள், ஆசிர்வாதம். தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்,. சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள்.

ஒரே வருத்தம், இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றிபெற வைத்துள்ளனர். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன். மோடி மீண்டும் பிரதமர் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் தமிழக மக்களின் முடிவெடுத்தது சரியானது

பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கொடுத்ததால் அவரை எனக்கு பிடிக்கும். நான் வழங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் எப்போதும் பிரதிபலிக்கிறது. மோடி நாட்டின் சட்டத்தை மதிக்கிறார். காமராஜரையே தோற்கடித்தார்கள் அது தான் ஜனநாயகம், ஆட்சியில் இருந்தால், திட்ட தான் செய்வார்கள். திட்ட திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு, ராமகிருஷ்ணரின் வார்த்தையை மோடி பின்பற்றுகிறார்.

அயோத்தியில், பாஜக வென்றிருந்தால் வாக்கு இயந்திரத்தை குறை கூறி இருப்பார்கள். இது ஜனநாயக நாடு. வெற்றி, தோல்வி மக்கள் அளிப்பது தான். மக்களிடம் பாஜக மீது அதிருப்தி இல்லை. காங்கிரஸ் எத்தனை முறை மாநில கட்சிகளின் ஆட்சிகளை கலைத்துள்ளார்கள்.

ஆனால், பாஜக அப்படி செய்யவில்லை. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன். அதிமுக கூட்டணி வைத்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும், நாம் தமிழர் கட்சி சீமான் தனது கட்சியை நன்கு கட்டமைத்து உருவாக்கியிருக்கிறார் என்றார். இலங்கைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு? நான் தமிழ் ஈழம் கேட்பதால், இலங்கை சென்றால் சிங்களர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்றார்.

Share this story