சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில், கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள 300 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
மீண்டும் அதே இடங்கள் :
கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, அதி கனமழை நாளை வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளது.
நடவடிக்கைகள் :
நேற்று இரவு பெய்தது போன்று மழை நீடித்தால் சென்னையில் வெள்ளம் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில், வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வடிகால்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுரை வழங்கி உள்ளார்.
விழிப்புணர்வு :
பொதுமக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் தங்களது வீடுகளில் தேங்கும் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதும், மழை வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையிலும் குப்பைகளை வெள்ளத்திலேயே வீசுவதும், பல இடங்களில் தற்போதும் தொடருகிறது.
இது தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
குப்பைகள் கால்வாய்களில் தேங்குவதாலேயே, தண்ணீர் வடியாமல் உள்ளது எனவும் கால்வாய்களை பராமரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
*