அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுமா.? விவரம்..

By 
pfestival

நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வருகிற 15ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. பல இடங்களில் பொருள்கள் தரமற்றவையாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் கடந்த 2023ஆம் ஆண்டில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தவகையில், நடப்பாண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு கட்டுப்பாடு விதித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் என அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து விலையில்லா வேட்டி-சேலைகளும் வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share this story