குழந்தைகளை கடத்தி விற்ற பெண் மருத்துவர் கைது : போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் மெகருநிஷா (வயது 60). இவர் சித்த மருத்துவர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடலூர் பஸ் நிலையம் அருகில் சித்த மருத்துவமனை வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
பெண் மருத்துவர் என்பதால் இவரிடம் ஏழை, எளிய பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். அவ்வாறு வரும் பெண்களின் வறுமையை பணமாக்க நினைத்த இந்த மருத்துவர், அவர்களின் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்குவார். குழந்தை பாக்கியம் இல்லாமல் உள்ள வசதி படைத்தவர்களிடம் குழந்தையை அதிக விலைக்கு விற்று விடுவார்.
இது தொடர்பாக இந்த மருத்துவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் காணாமல் போனது. குறிப்பாக வடலூர் சுற்றுவட்டார பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குழந்தைகள் மாயமானார்கள். இது தொடர்பாக 4-க்கும் மேற்பட்ட புகார்கள் வடலூர், புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
கடலூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற ராஜாராமன், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளை வாங்கி விற்ற சித்த மருத்துவர் மெகருநீஷாவினை கடந்த ஒரு வாரமாக போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சித்த மருத்துவர் குழந்தைகளை வாங்கி விற்றது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் சித்த மருத்துவர் மெகரு நீஷாவை கைது செய்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.