பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

By 
tt7

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின்  சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.  பலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 9ம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதியோடு நிறைவு பெற்றதை அடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கினார். 

அதில்,  பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராஜேஷ் தாஸ்க்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Share this story