காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை: பெண்ணின் பெற்றோர் கைது..

By 
par1

தஞ்சாவூர் அருகே  மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை பெருமாள், தாய் ரோஜா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (20). இவர் பக்கத்துக்கு கிராமமான பூவாளூரை சேர்ந்த நவீன்(20). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். படிப்பை முடித்த இருவரும் தற்போது இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2 பேரும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் வைரலானது.

இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் கடந்த 2ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். பின்னர், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்துள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் காதலன் நவீன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காதல் திருமணம் செய்த மகளை ஆணவக்கொலை செய்த வழக்கில் தந்தை பெருமாள் - தாய் ரோஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Share this story