உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 2024.. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. தீரத்துடன் அடக்கும் வீரர்கள்..

By 
jalli5

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளுக்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று காலை 7 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை காண ஏராளமானோர் குவிந்துள்ளதால் பாலமேடு விழாக்காலம் பூண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என மாலை 5 மணி வரை இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக முதன்முதலாக 7 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்க வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த காளை, சிறந்த வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்படுகிறது.

2-ம் இடம் பிடிக்கும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் காளைக்கு கன்றுடன் கூடிய பசு பரிசாக வழங்கப்படும். இதே போல் தங்கக்காசுகள், வெள்ளிக்காசு, கட்டில்,பீரோ என பல வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

Share this story