காதலிப்பதாக கூறி பள்ளி மாணவி பலாத்காரம்: இளைஞர் மற்றும் 52 வயது ஆசிரியர் கைது..

By 
pokso

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் (52) என்பவரிடம் மாணவி கூறியுள்ளார். இந்நிலையில், இவர் பள்ளி மாணவியை விசாரிப்பது போல் தனது வீட்டிற்கு  அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து மகள் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் பெற்றோர் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது அழுதபடியே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Share this story